Tuesday, April 13, 2010

கட்சித் தலைமை மாறாது''-ரணில்

இலங்கையில் நடந்துமுடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் உட்பட கடந்த பல தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியை சந்தித்துவருகின்ற நிலையில் அந்தக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து தான் விலகப்போவதில்லையென ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
தேர்தலில் பெருமளவு மக்கள் வாக்களிக்காது தவிர்த்துள்ள நிலையில் தற்போது உருவாகியுள்ள புதிய சூழ்நிலையில் கட்சி தலைமைத்துவம் குறித்து சிந்திக்க தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
தேர்தல்கள் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியும் அவநம்பிக்கையுமே தமது கட்சியின் தோல்விக்கு காரணம் என ரணில் தெரிவித்தார்.
இம்முறை வாக்குகள் எண்ணும் பணிகளில் மோசடிகள் எதுவும் இருக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட எதி்ர்க்கட்சித் தலைவர் அதனை தேர்தல் அதிகாரிகள் சரியான முறையில் உறுதிசெய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தேர்தல் நடைமுறைகளில் மக்கள் அதிருப்தி
இதற்கிடையில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதருப்தி போக்கே இந்த நிலைமைக்கு காரணம் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரணில் மற்றும் மகிந்த
ரணில் மற்றும் மகிந்த
நாட்டில் தேர்தல்கள் அடிக்கடி நடைபெறுவதும் மக்களின் பிரச்சனைகள் தேர்தல் காலங்களில் அணுகப்படும் வழிமுறைகளுமே மக்களின் இந்த ஆர்வமற்ற போக்குக்கு காரணம் என பெஃப்ரல் அமைப்புடன் இணைந்து கடந்த ஆறு தேர்தல்களில் கடமையாற்றியுள்ள சர்வதேச கண்காணிப்பாளரான முத்துக்குமாரன் விஷ்வநாத் தெரிவிக்கின்றார்.
கடந்த தடவைகளுடன் ஒப்பிடும் விட பாரியளவிலான அசம்பாவிதங்களோ பிரச்சனைகளோ இன்றி இம்முறை தேர்தல் நிறைவு பெற்றிருப்பதாக பெப்பரல் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் ஆர்ப்பாட்டங்கள்-(ஆவணம்)
மக்கள் ஆர்ப்பாட்டங்கள்-(ஆவணம்)
சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் உள்ளவர்களுக்கும் வாக்குரிமை உண்டு என்பதை உணர்ந்து அவர்கள் வாக்களிப்பதற்கும் வழிசெய்யப்பட வேண்டும் என்பது கண்காணிப்பாளர்களின் கருத்தாகவுள்ளது.
இந்தியாவை போன்று மின்னணு வாக்குப்பதிவு நடைமுறையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேர்தல் மோசடிகளையும் அவை தொடர்பான சந்தேகங்களையும் தடுக்க முடியும் எனவும் கண்காணிப்பாளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு சிபார்சு செய்துள்ளனர்.




No comments: