Saturday, April 17, 2010

'பூட்டோ படுகொலை'- ஐநா காட்டம்

 பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் படுகொலையை தடுக்கவோ அது தொடர்பில் விசாரணை நடத்தவோ அந்நாட்டு அரசாங்கம் தவறியுள்ளதாக ஐநாவால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்தோடு பாகிஸ்தானின் அதிகாரம்மிக்க புலனாய்வு முகவர்களையும் அந்த விசாரணைக் குழு கடுமையாக சாடியுள்ளது.
பெனாசீர் பூட்டோ இரண்டு வருடங்களுக்கு முன்னால் இஸ்லாமாபாத்துக்கு அருகே தேர்தல் பிரச்சாரமொன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும் போது நடத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
படுகொலை நிகழ்ந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளை மட்டுமே கருத்தில் எடுக்ககூடிய விதத்தில் அமைந்திருந்த ஐநாவின் இந்த விசாரணை ஆணையம், குற்றவியல் பொறுப்பு எதனையும் யார்மீதும் சுமத்தாதபோதிலும் மிகக்கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளது.
படுகொலைக்கு முன்னதாக பிரச்சார வாகனத்தில் பெனாசீர் பூட்டோ
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஷ் முஷாரப் அரசாங்கம் பெனாசீர் பூட்டோவை எல்லா மட்டங்களிலுமே பாதுகாக்க தவறியுள்ளதாக மிகத் தெளிவாக குற்றஞ்சாட்டியுள்ள இந்த விசாரணை அறிக்கை, பூட்டோவின் படுகொலைக்கு பின்னால் இருந்தவர்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை தேவைப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
படுகொலைக்கு முன்னதாக பிரச்சார வாகனத்தில் பெனாசீர் பூட்டோபூட்டோ ஏற்கனவே படுகொலை முயற்சியொன்றிலிருந்து தப்பிவந்திருந்த நிலையில், அவரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவரது உயிருக்கே உலை வைக்குமளவிற்கு இருந்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்த படுகொலையின் பின்னரான அரசாங்கத்தின் பதில்நடவடிக்கை தொடர்பில் இன்னும் காட்டமாகவே விசாரணைக் குழு விமர்சித்துள்ளது.
படுகொலை விசாரணைகளை பாதுகாப்பு படையினர் திட்டமிட்டே புறக்கணித்துள்ளதாக ஐ.நா விசாரணைக்குழுவின் தலைவர் ஹெரால்டோ முனொஸ் கூறுகிறார்.    
 பிரச்சனையை மூடிமறைப்பதற்கு திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதற்கு சங்கிலித் தொடரான பல சம்பவங்கள் சான்றுகளாக உள்ளன
 
ஹெரால்டோ முனொஸ்-ஐநா விசாரணைக்குழு
ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சூத்திரதாரிகளை சிக்க வைக்காமல் விசாரணைகள் அடிமட்டங்களிலேயே நின்று விட்டதாகவும் அந்த விசாரணைகளின் அனைத்து கட்டங்களிலும் புலனாய்வு முகவர்களின் பரவலான செல்வாக்கு ஊடுருவியிருந்ததாகவும் ஐநா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 

ஆனால் தற்போது அதிபராகவுள்ள பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆசிஃப் அலி ஸர்தாரி கையிலேயே விசாரணைகளின் அடுத்தக்கட்டம் தங்கியுள்ளது.
பாகிஸ்தானின் மிக பலமான இராணுவக் கட்டமைப்பை விசாரணைக்குள்ளாக்குவதே நம்பத்தகுந்த குற்றவியல் விசாரணையொன்றுக்கு வழிவகுக்கும் என்பதை அந்நாட்டு மக்களுக்கு இந்த ஐ.நாவின் அறிக்கை உணர்த்தியுள்ளது.
ஆனால் பாகிஸ்தானில் அப்படியான விசாரணைகளை செய்வது சிரமம் என்றே தெரிகின்றது.



No comments: