Wednesday, March 2, 2011

இரண்டு கிபீர் விமானங்கள் மோதி விபத்து: யக்கல பகுதியில் விழுந்து சிதறின விமானி பலி மற்றவர் உயிர் தப்பினார்



கம்பஹா, யக்கல பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு கிபீர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு விமானங்களும் விழுந்து சுக்கு நூறாகியுள்ளன.
இந்த கோர விபத்துச் சம்பவம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் யக்கல வான் பரப்பில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் விபத்துக்குள்ளான கிபீர் விமானங்களை செலுத்திய இரு விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் குறூப் கெப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்தார்.
இரு கிபீர் விமானங்களும் விபத்துக்குள்ளாகி விழுந்து சிதறியதில் பொதுமக்கள் எவருக்கும் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லை என்று தெரிவித்த அவர், சொத்துகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இலங்கை விமானப்படையின் 60வது வருட பூர்த்தியை முன்னிட்டு இரத்மலானை விமானப் படைத் தளத்தில் இன்று (02) பிரதான வைபவம் இடம்பெறவுள்ளது.
இதனை முன்னிட்டு ஒத்திகைக்காக கட்டுநாயக்க விமானப் படைத் தளத்திலிருந்து கிபீர் உட்பட பல்வேறு ரக விமானங்கள் புறப்பட்டுள்ளன. இவற்றில் இரு கிபீர் விமானங்களே இவ்வாறு அனர்த்தத்திற்குள்ளாகியுள்ளன.
இந்தச் சம்பவத்தில் ஃபிளைட் லெப்டிணன்ட் மொனாத் பெரேரா என்பவர் உயிரிழந்துள்ளதுடன், ஸ்கொடன் லீடர் வஜிர ஜயகொடி என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த இவர் உடனடியாக கட்டுநாயக்க விமானப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஒத்திகைக்காக பல்வேறு வகையான விமானங்கள் கட்டுநாயக்க விமானப் படைத் தளத்திலிருந்து காலை 9.10 மணியளவில் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு கட்டுநாயக்க வான் பரப்பை நோக்கி வந்துள்ளன.
இவை யக்கல வான் பரப்பில் பறந்து வந்துகொண்டிருக்கும்போது ஒரு கிபீர் விமானத்தின் சிறகு மற்றைய கிபீருடன் மோதியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் விமானிகள் இயற்கையாகவே வெளியில் தள்ளிவிடப்படுவதாக தெரிவித்த அவர், பின்னர் பரசூட் உதவியுடன் தரையிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஒருவரின் பரசூட் விமானத்தின் ஒரு பகுதியிலேயே சிக்கியிருக்கிறது. அவ்வாறு சிக்கிய விமானியே உயிரிழந்துள்ளார் என்றார்.
“வானில் ஒன்றன் பின் ஒன்றாக வரிசைகளுடன் பல்வேறு ரக விமானங்கள் பறந்துகொண்டிருந்தது. தாழ்ந்த தூரத்தில் பறந்துகொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது இரு கிபீர் விமானங்கள் சிறகுப் பகுதியுடன் மோதியது.
அதனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அதிலிருந்து இருவர் பரசூட் உதவியுடன் கீழே குதித்ததாக சம்பவத்தை நேரில் கண்ட திஹாரிய ஹஸனிய்யா அரபுக் கல்லூரி பிரதி அதிபர் மெளலவி ஏ. எல்.எம். மkன் தினகரனுக்குத் தெரிவித்தார்.
ஒன்றுடன் ஒன்று மோதியதை அடுத்து இரு விமானங்களும் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் புகையை கக்கியவண்ணம் விழுந்ததாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
 யக்கலையிலிருந்து சுமார் ஆறு கிலோ மீற்றர் கிரிந்த பகுதியில் இரு விமானங்களும் விழுந்து சிதறியுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
சம்பவத்தையடுத்து அந்தப் பிரதேசம் எங்கும் புழுதியுடன் கூடிய புகை மூட்டம் காணப்பட்டதுடன், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஸ்தலத்திற்கு விரைந்து நிலைமைகளை அவதானித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் நடைபெற்ற சில மணித்தியாலத்தில் அந்தப் பிரதேசத்திற்கு உடனடியாக விரைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், விமானப் படைத் தளபதி ஹர்ஷ அபேவிக்ர உட்பட உயர் அதிகாரிகள் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். விசாரணைகள் தொடர்கின்றன


No comments: