Monday, May 31, 2010

ஒழுங்கவிழ்ப்பு 1


இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு கோட்பாடுகள், மெய்யியல், அரசியல், பண்பாட்டு, கலை, இலக்கியத் தளங்களில் தோற்றம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் அமைப்பியலுக்குப் பின்வந்த சிந்தனைதான் ஒழுங்கவிழ்ப்பாகும். பின்னமைப்பியல், கட்டுடைப்பு, கட்டவிழ்ப்பு என்ற பதங்களும் இதைக் குறிக்கப்பயன்படுத்தப் படுகின்றன. இப்பதங்கள் நுண்ணிய வேறுபாடுகளை அதன் மெய்யியல் தளங்களில் கொண்டிருந்தாலும் பொது நினைவில் ஒழுங்கவிழ்ப்பையே குறித்து நிற்கின்றன.

ஒழுங்கவிழ்ப்பின் மெய்யியல் வேர் கலை இலக்கியத் திறனாய்வுத் தளத்தில் அதன் வகிபாகம், நேர் எதிர்மறைப் பண்புகள் குறித்து இக்கட்டுரை ஆராய்கின்றது.

ஒழுங்கவிழ்ப்பு என்ற சொல்லாடலைத் தொடக்கிவைத்தவர் பிரான்சிய மெய்யியலாளர் ஜாக் டெர்ரிடா (1930) ஆவார். 1967 களில் அவர் வெளியிட்ட மூன்று நூல்களில் இச்சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளார்.

1. Speech and Phenomena 1973.
2. Of Grammatology 1976.
3. Writing and Difference 1978.

அவரைத் தொடர்ந்து பல பிரான்சிய எழுத்தாளர்கள் இப்பதத்தால் கவரப்பட்டார்கள். பின்னர் இந்நூல்கள் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட பின் பல அமெரிக்கர்கள் ஒழுங்கவிழ்ப்பாளர்களாகத் தம்மை மாற்றிக் கொண்டனர். யேல் சிந்தனைப் பள்ளி விமர்சகர்கள் குறிப்பாக இப்பதத்தைக் கையாண்டனர்.

பொப்பர் ஜோன்சன் விமர்சன முரண்பாடு என்ற தமது நூலில் ஒழுங்கவிழ்ப்பு என்பது ஒழுங்கழிப்புக்கு ஒத்த பதம் அல்ல என்கிறார். அது பகுப்பாய்வுக்கு மிக நெருக்கமானது. பிரதியை ஒழுங்கவிழ்ப்புச் செய்வது குருட்டுத்தனமாக நிறைவேறும் காரியமல்ல. அல்லது அநீதியான முறையில் பிரதியை அழிப்புச் செய்வதுமல்ல. பிரதியை வாசிப்புச் செய்வதன் மூலம் சிறு தகர்வு ஏற்பட்டாலும் பிரதியின் உள்ளார்ந்த ஒழுங்கை அது சுட்டும் அர்த்தங்களின் பலத்தோடு அப்பகுப்பாய்வு நடைபெறும். கருத்தின் ஒரு மாதிரியிலிருந்து மற்றொன்றுக்கு தெளிவான ஆதிக்க விருப்புடன் அது இடம்பெறும். ஒழுங்கவிழ்ப்பு வாசிப்பானது ஒரு பிரதியின் உள்ளார்ந்த பன்முக விமர்சனக் கருத்துக்களை பகுப்பாய்வு செய்யும் வாசிப்பாகும் என்கிறார்.

மேலே குறிப்பிட்டது பொப்பரின் கருத்தாக இருந்தாலும் ஒழுங்கவிழ்ப்பின் ஸ்தாபகர் என்ற வகையில் டெர்ரிடா ஐரோப்பிய சிந்தனை குவிமையப்படுத்தியிருந்த அடிப்படைகளை குறிப்பாக ஐரோப்பிய மையவாதத்தை தகர்ப்பதே நோக்கமாக இருந்தது.

ஒழுங்கவிழ்ப்பு பெரும்பாலும் பின்னமைப்பியல் என்ற பதத்தையே ஒத்திருக்கின்றது. அமைப்பியலுக்குப் பின்வந்த சிந்தனையாகவே ஒழுக்கவிழ்ப்பு பார்க்கப்படுகின்றது. ஒழுங்கவிழ்ப்பு விமர்சன முறையானது இரண்டு பிரதான பகுதிகளை உள்ளடக்கியது. ஒன்று, அதன் கோட்பாட்டுத் தளம். மற்றையது, அதன் செயல் தளமாகும்.

கலாநிதி முஹம்மத் அனானி De-construction என்ற ஆங்கிலப் பதம் Destruktion என்ற ஜேர்மன் சொல்லிலிருந்தே தோன்றியது என்பார். இதற்கு வேறு பதங்கள் அம்மொழியில் தோன்றவில்லை. ஆனால் ஆங்கில மொழியில் இச்சொல்லிலிருந்து வேறுபதங்களையும் தோற்றுவித்துள்ளனர். குறிப்பாக To Deconstruct பயன்பாட்டிலுள்ளது. மாட்டின் கிரேயின் இலக்கியச் சொல்லாடல்கள் என்ற அகராதியில் இடம்பெற்றுள்ளது.

கலாநிதி அனானின் ஒழுங்கவிழ்ப்பு என்பதைக் குறிக்கும் தப்கீக் என்ற அரபுப் பதம் ‘உறவுகளை அவிழ்த்தல்’ என்ற செயற்கை வேர்ச்சொல்லிருந்தே தோன்றியது என்பார். மொழிக்கென உள்ள நியதிகளை அவிழ்ப்புச் செய்வதே இதன் நோக்கமாகும். மொழியின் ஆதிக்கத்தை மறுத்து வாசக நிலைப்பட்ட கருத்துக்கு முதன்மையளிப்பது ஒழுங்கவிழ்ப்பாகும் என்கிறார். 

இவ்வரைவிலக்கணம் நுணுக்கமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் முழுமையானது அல்ல. ஒழுங்கவிழ்ப்புத் தொழிற்பாட்டின் மிகமுக்கியமானதொரு செயற்பாட்டையே இது விளக்குவதாகவுள்ளது.
ஒழுங்கவிழ்ப்பு இவ்வாறு உச்ச நிலையை அடைந்து மேற்கில் அஸ்தமணமாகிய காலப்பிரிவிலேயே அரபு இஸ்லாமிய உலகை வந்தடைந்தது. அக்காலப்பிரிவில் கலாநிதி அப்துல்லாஹ் முஹம்மத் அல் கதாமி என்பவரே இச்சிந்னையின் பால் ஈர்க்கப்பட்டார். அவர் இச்சிந்தனையை அரபு நிலைப்பட்ட வாசகர் மத்தியில் அறிமுகப்படுத்தினார். அவர் ஆரம்பத்தில் ஒழுங்கவிழ்ப்பைக் குறிப்பதற்கு தஷ்ரிஹிய்யா என்ற சொல்லையே பயன்படுத்தினார். மேற்கின் சொல்லாடலுக்கு இச்சொல் பொருந்தும் என்றே அவர் கருதினார். Anotomy of Criticism என்ற நூலால் அவர் பெரிதும் ஆகர்ஷிக்கப்பட்டார். ஆனால் அரபுப் புலமையாளர்கள் விமர்சகர் மத்தியில் இச்சொல் பிரபல்யமடையவில்லை. தப்கீக் என்ற சொல்லே பெருவழக்காக கையாளப்பட்டது.

கலாநிதி மீஜான் அர்ருவைலி, கலாநிதி ஸஃதுல் பாசிகி ஆகியோர் தக்வீழ் என்ற பதத்தை ஒழுங்கவிழ்ப்புக்கு இணையான பதமாக அறிமுகப்படுத்தினர். ஜாக் டெர்ரிடா பயன்படுத்திய ஒழுங்கவிழ்ப்பு என்ற பதத்திற்கு இதுவே மிகப்பொருத்தமானது என்று அவர்கள் நினைத்தனர். கலாநிதி அப்துல்லாஹ் அல் கதாமி நூலின் மூலம் அவ்விருவரும் பயன் பெற்றாலும் அவரது தஸ்ரிஹிய்யா என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்த வில்லை. அவர்கள் தக்வீழ் என்ற சொல்லை தப்கீகை விட சிறந்தது என்பதற்கு பின்வரும் காரணங்களை முன்வைத்தனர்.

1. டெர்ரிடாவின் கோட்பாட்டை விளக்க தப்கீக் என்ற சொல்லைவிட தக்வீழ் என்பதே மிகநெருக்கமானது.

2. ரெனே டேக்காட் Mechanism போன்ற கோட்பாடுகளோடு குழப்பிக் கொள்ளாமல் இருக்க இது உதவும்.

3. கட்டுடைப்புச் செய்தபின் கட்டுதல் என்ற கட்டுடைப்பாளர்களின் போக்கை தக்வீழ் ஏற்பதாய் இல்லை.

4. மேற்கத்திய பின்நவீன சிந்தனையைத் தெளிவாகச் சுட்டுவதற்கும் கட்டுடைப்பு அவசியம் செய்யப்படவேண்டும் என்பதைக் காட்டுவதற்கும் தக்வீழ் என்ற பதமே பொருத்தமானது.

ஆனால் இக்காரணங்கள் பலமாவை அல்ல என்று இலக்கிய விமர்சகர் வழிகாட்டி என்ற நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. டேக்காட்டின் கோட்பாடு அனைத்தையும் சந்தேகித்தல் என்பதன் மீது எழுப்பப் பட்டிருந்ததே யல்லாமல் தகர்ப்பதாய் இல்லை என்று அந்நூல் கூறுகின்றது. மொழியின் வெளியே இருக்கும் உண்மையை அடைவதற்கான சந்தேகமாகும். 

ஆனால் டெர்ரிடாவின் ஒழுங்கவிழ்ப்பு பிரதிக்கு வெளியே எதுவும் இல்லை என்பதாகும். அவர் மொழிக்கும் அது காட்டும் கருத்துக்கும் இடையில் உள்ள உறவை தகர்த்துவிடுகின்றார். பிரதியை ஒழுங்கவிழ்ப்புச் செய்யும் போதே அதற்கான விளக்கம் கிடைத்துவிடுகின்றது. அப்பணியால் அதுவே பிரதியாக உருப்பெறுகின்றது. ஒழுங்கவிழ்ப்பாளன் ஒழுங்கவிழ்ப்புச் செய்த பகுதிகளைக் கொண்டே பிரதி கட்டப்படுகின்றது. ஆனால் தப்கீக் என்ற பதம் பொருத்தமான ஒரு பதம்தான். எகிப்திய ஆய்வாளர்கள் இப்பதத்தை பெரிதும் தம் நூல்களில் பயன்படுத்தியுள்ளனர். சமகால இலக்கியக் கோட்பாடுகள் என்ற நூலில் கலாநிதி ஸலாஹ் பழ்ல், நவீன இலக்கிய சொல்லாடல்கள் என்ற அகராதியில் கலாநிதி முஹம்மத் அனானி, சமகால இலக்கியக் கோட்பாடு என்ற ரோமன் சல்டன் மொழிபெயர்ப்பில் கலாநிதி ஜாபிர் உஸ்பூர் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்.

மார்ட்டின் ஹைடெகர் என்ற ஜேர்மனியத் தத்துவஞானியின் தாக்கத்திற்குட்பட்டே ஜாக் டெர்ரிடா ஒழுங்கவிழ்ப்பு சிந்தனையை வளர்த்தெடுத்தார். டெர்ரிடா அறிவுத் தொழிற்பாடு பற்றியும் அறிவைப் பெறும் முறையைப் பற்றியும் அதிக ஈடுபாடு காட்டியவர். ஹைடெகருக்கு முன்னமே அதுபற்றிய சர்ச்சை இருந்துவந்தது. இந்த ஜேர்மனியத் தத்துவ ஞானி அறிவு என்பது மொழியின் மூலமாகவே பூரணமடைகின்றது என்ற கருத்தைக் கொண்டிருந்தார். மொழியிலேயே அனைத்தும் நிலைபேறு அடைகின்றன. கட்டமைப்பை பிரசன்னப்படுத்துவதும் அதுவே. அதேநேரம் மொழியை, மரபுகளைக் கெட்டியாகப் பிடித்துவைத்திருக்கின்றது. ஆக, அறிவைப் பெறவேண்டுமானால் மொழியைத் தகர்க்வேண்டும் என்று கூறினார். மொழித்தகர்ப்பு என்ற சொற்பிரயோகம் ஒழுங்கவிழ்ப்பு என்ற சொல்லை புதிதாகக் கண்டுபிடிப்பதற்கு டெர்ரிடாவுக்கு வழியைத் திறந்துவிட்டது எனலாம். சில ஆய்வாளர்கள் ஜேர்மனிய ஹைடெகரின் கோட்பாட்டோடு ஒழுங்கவிழ்ப்பை தொடர்புபடுத்தி ஆராய்வதற்கும் இதுவே காரணமாகும். டெர்ரிடாவின் ஒழுங்கவிழ்ப்புத் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள் அறிவு, மொழி, பிரசன்னம், மறைபொருள், முடிவற்ற அர்த்தம், நிலையானதை முன்னைய வாசிப்புக்களை மறுத்தல், அறிவின் அடிப்படை மையத்தை இல்லாமல் செய்தல் போன்ற சிந்தனைகள் ஹெகரின் சிந்தனைகளை ஒத்திருக்கின்றன. தற்செயலின் எல்லைகள் அல்லது சிந்தனைத் தொடர்ச்சியை எட்டுகின்ற வகையில் செய்யப்படும் ஹைடெகரின் வியாக்கியான தத்துவத்தோடு ஒத்துச் செல்கின்றன. ஹெகரினால் டெர்ரிடா பயன்பெற்றுக் கொண்டார் என்பதே உண்மையாகும். டெர்ரிடா ஹைடெகரின் தத்துவத்தை வாசித்தார். ஆனால் ஒழுங்கவிழ்ப்புச் சிந்தனையை அவரே உருவாக்கினார் என்பதே உண்மையாகும். மனித அறிவு வரலாற்றில் முன்னையதின் தொடர்ச்சியாகவே பின்னைய அறிவு வரலாறு தொடங்குகின்றது.
(தொடரும்)


No comments: