Monday, April 26, 2010

சிரிப்பு

 .       சிரிப்புக்கு பல காரணங்கள் இருக்கின்றன, ஒரு நல்ல மனதைக் கவர்ந்த ஒன்றைக் காணும் பொழுதும், நற்செய்திகளைச் செவிமடுக்கும் பொழுதும், சிரிப்பை வரவழைக்கக் கூடிய ஜோக்குகளைக் கேட்கும் பொழுதும், ஒருவருக்கு இயல்பாகவே சிரிப்பு வரும்.

        பிறர் சிரிக்க வேண்டும் என்பதற்காக ஒரு செய்தியைச் சொல்லுதல் கூடாது, மாறாக, அந்த சிரிப்பிற்கு அர்த்தம் இருக்க வேண்டும்.

         சிரிப்பு என்பது வெடிச்சிரிப்பாக இருக்கக் கூடாது, மாறாக, சப்தத்தைக் கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அளவுக்குச் சிரிப்பு இருக்க வேண்டும்.

         உங்களது கடவாய்ப் பல் தெரியும் அளவுக்கு சிரியுங்கள், ஆனால் சப்தத்தைக் கட்டுபடுத்திச் சிரியுங்கள்.

         ஒரு முஸ்லிம் இன்னொருவரைச் சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக ஜோக்குகளை உதிர்க்கக் கூடியவராக இருக்கக் கூடாது, அவ்வாறு செய்வது பொய் பேசுவதில் தான் முடியும்.

         எவர் ஒருவரைச் சிரிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றாரோ, அத்தகைய நபர்கள் இருக்கக் கூடிய சபையில் ஒரு முஸ்லிம் அமர்ந்திருக்கக் கூடாது.

        சிரிப்பின் மூலம் பிறர் மனதைப் புண்படுத்தும் செயலை ஒரு முஸ்லிம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

அழுகை

     அழுகை என்பது துயரமான சம்பவங்களின் பின்னணியில் வரக் கூடியது, அதற்கும் நல்ல காரணங்கள் இருந்தாக வேண்டும்.

     அழாதவன் மனிதனல்ல, அது மனிதத் தன்மையுமல்ல, உணர்வுகளைக் கட்டுப்படுத்தக் கூடாது. ஆனால் அந்த உணர்வுகள் வெடித்து விடாமல், ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். வீரிட்டு ஒப்பாரி வைப்பது முஸ்லிமிற்கு ஆகுமானதல்ல.

ஜோக்குகள் அல்லது ஹாஸ்யம்

     பிறரிடம் ஜோக்குகள் அல்லது கேளிக்கையாகப் பேசுவது நல்லது தான், ஏனென்றால் எப்பொழுதுமே ஒருவர் முகத்தை சிடுசிடு என்று வைத்திருப்பதை விட இது மிகவும் நல்லது.

     ஜோக்குகளை வெளிப்படுத்தும் பொழுது கண்ணியமான முறையில் அதனை வெளிப்படுத்த வேண்டும். மாறாக, பிறரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குத்திப் பேசுதல் கூடாது.

     அதிகப்படியான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட ஜோக்குகளைத் தவிர்க்க வேண்டும், ஏனென்றால் அது பிறரது உணர்வுகளைப் புண்படுத்தக் கூடியதாக அமைந்து விடும்.

     எதைப் பற்றி நாம் ஜோக்கடிக்கின்றோமோ, அதைப் பற்றிய அறிவுடன் நாம் அதனை வெளிப்படுத்த வேண்டும், அதன் உள்ளடக்கம் தவறி விடுமேயானால் அது பிறரது உணர்வுகளைக் காயப்படுத்தி விடும்.

    ஜோக்குகளின் பொழுது மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு, ஆக்ஷன் ஆகியவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

     ஜோக்குகளின் பொழுது பிறருக்கு உரிமையானவற்றைப் பற்றித் தன்னுடைய ஜோக்குகளில் கலக்கக் கூடாது.

     ஜோக்குக்குத் தானே சொன்னேன் என்ற போர்வையில், பிறரை கலவரப்படுத்தக் கூடாது.

     விளையாட்டுக்காகக் கூட, பொய் கலந்து ஜோக்கடிக்கக் கூடாது.

சந்திப்புகளின் பொழுது

ஒரு முஸ்லிம் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் :

     சிரியுங்கள், புன்னகை தான் வெற்றியின்முதல் படியே! ஆயினும், பொருளாதாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு உங்களை புன்னகைகளை பிறரிடம் வெளிப்படுத்தாதீர்கள்.

     ஒரு முஸ்லிம், இன்னொரு முஸ்லிமிற்கு ஸலாம் உரைப்பதற்கு முந்திக் கொள்ள வேண்டும்.

     ஸலாம் சொல்கின்றேன் என்ற பெயரில் யாருக்கும் தன்னுடைய தலையை ஒரு முஸ்லிம் தாழ்த்தி விடக் கூடாது. அவர் யாராக இருந்தாலும் சரியே! அவர் எத்தகைய அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் சரியே! எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் சரியே!

     சந்திப்பின் பொழுது, ஒருவருக்கொருவர் ஸலாம் உரைத்துக் கொண்ட பின், ஒருவர் மற்றவருக்கு தனது வலது கரத்தைக் கொடுத்து கைலாகு கொடுத்துக் கொள்வது மிகச் சிறந்தது, இது உங்களுக்குள் பரஸ்பர உறவை வளர்க்கக் கூடியதாக இருக்கும்.

     எப்பொழுதுமே பிறருக்கு இடையூறாக இருக்கக் கூடியவர்களிடமிருந்து ஒதுங்கி இருந்து கொள்ளுங்கள். அத்தகையவர்கள் வரும் பொழுது அவர்களிடமிருந்து தவிர்ந்து இருந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

    நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒருவர் உங்களுக்கு கைகொடுக்க முன்வந்தால், என்னுடைய கைகள் அழுக்காக இருப்பதின் காரணமாக, உங்களுக்கு கை கொடுக்க இயலாத நிலையில் இருக்கின்றேன் என்பதை நாசுக்காகச் சொல்லுங்கள்.

    ங ஒவ்வொரு முறை சந்திப்பின் பொழுதும், கைகொடுக்க வேண்டுமே என்பதையிட்டு நீங்கள் வெறுப்புக் கொள்ளாதீர்கள்.

     ஆண்கள் ஆண்களிடமும், பெண்களிடமும் கைகொடுத்துக் கொள்ளுங்கள். ஆண் பெண்ணுக்கும், பெண் ஆணுக்கும் கைகொடுக்க வேண்டும் என்ற சந்தர்ப்பம் இருந்தால், கைகொடுக்க இயலாது என்பதையும், அதன் காரணத்தையும் தெளிவுபடுத்துங்கள்.

     குடும்ப விவகாரங்கள் பற்றிய விசாரணைகள், உடல் நலன்கள் மற்றும் இதுபோன்றவற்றை சந்திப்பின் போது கேட்பது நல்லது. இருப்பினும் இதனை வெகுநேரத்திற்கு இதனை மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பது, அதனைச் சுற்றியே பேச்சை அமைத்துக் கொள்வது மற்றவரை வெறுப்புக்குள்ளாக்கி விடக் கூடும். எனவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் சுருக்கமான விசாரிப்புகளை மேற்கொள்வது நல்லது.

    உங்களை ஒருவர் சந்திக்க வருகின்றார். எந்தவித முகமனும் கூறாமல் நேரடியாக உரையாடலை நடத்த ஆரம்பித்து விடுவாராகில், இத்தகைய நபர்கள் உங்களது உரையாடலுக்குத் தகுந்த நபர்கள் அல்ல, இவர்கள் தவிர்ந்து கொள்ளப்பட வேண்டியவர்கள்.

     நீங்கள் அமர்ந்திருக்கின்ற நிலையில் ஒருவர் வருகின்றார், அவருக்கு எழுந்து நின்று தான் கைலாகு கொடுக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் சில சந்தர்ப்பங்களில், அதாவது ஒருவர் பிரயாணத்திலிருந்து வருகின்றார், இன்னும் வயதில் மூத்தவர் வருகின்றார், அவருக்கு இருக்கையை காலி செய்து விட்டுக் கொடுக்கும் நோக்கில் எழுந்து நிற்பது போன்ற சந்தர்ப்பங்கள் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் பிறருக்காக எழுந்து நிற்பது கூடாது.

     உங்களைச் சந்திக்க வரும் அறிஞர்கள் மற்றும் தந்தை ஆகியோரின் கரங்களை முத்தமிடுவதில் தவறில்லை. ஆனால் ஆட்சி, அதிகாரம் பெற்றவர்களின் கைகளை முத்தமிட்டு அதன் மூலம் சில அனுகூலங்களை அடைந்து கொள்வதற்காக முத்தமிடுவது தவிர்க்கப்பட வேண்யடிதொன்று. ஆனால் முத்தமிட அனுமதிக்கப்பட்டதன் நோக்கம், கைலாகு கொடுப்பதற்கான மாற்றாகக் கருதப்படக் கூடாது.

     உங்களது சந்திப்பு முடிந்து விட்டதைக் குறிக்கு முகமாக மீண்டும எழுந்து இருவரும் கைகொடுத்துக் கொண்டு, அஸ்ஸலாமு அலைக்கும்! உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக என்ற பிரார்த்தனையுடன் இருவரும் பிரிந்து கொள்ள வேண்டும்.

    * ஒருவர் தொற்று வியாதியுடன் இருக்கும் நிலையில், அவருடன் கைகொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அதனைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

    * தொழுகை முடிந்ததும் ஒருவர் மற்றவருக்கு கைகொடுத்துக் கொள்வது சுன்னாவைச் சேர்ந்ததல்ல.

    * தகப்பலல்லாஹ்! அல்லாஹ் நம்முடைய வணக்கங்களை அங்கீகரிப்பானாக! என்று கூறுவதும் சுன்னாவைச் சேர்ந்ததல்ல.

சந்திப்புகளின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்

        * ஒருவர் மற்றவரைச் சந்திக்கும் பொழுது ஸலாம் சொல்வதும், ஒருவர் மற்றவரை வாழ்த்திக் கொள்வதும் நட்பையும், இணக்கத்தையும் உருவாக்கும். அது இரக்கத்தையும், சமுதாய சகவாழ்வையும் ஏற்படுத்தும்.

       * வாகனத்தில் அமர்ந்திருப்பவர் நடந்து சென்று கொண்டிருப்பவருக்கும், நடந்து சென்று கொண்டிருப்பவர் உட்கார்ந்திருப்பவருக்கும், சிறிய குழு பெரிய குழுவுக்கும் ஸலாம் உரைப்பதில் முந்திக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் வயதானவர்களுக்கு முந்திக் கொண்டு ஸலாம் உரைக்க வேண்டும். சம வயதுள்ள இருவர் சந்திக்க நேர்ந்தால், அவர்களில் யாராவது ஒருவர் ஸலாம் உரைப்பதில் முந்திக் கொள்ள வேண்டும்.

        * தாரளத்தன்மையும், இன்னும் விட்டுக் கொடுக்கும் பண்பும் மேற்சொன்ன நடைமுறைகளின் மூலம் உருவாகக் கூடியதாகும். ஒருவர் மற்றவருக்கு ஸலாம் உரைப்பதில் எந்தவித தயக்கமும் காட்டுவது நல்லதல்ல.

        * ஒருவர் மற்றவருக்கு ஸலாம் உரைக்கும் பொழுது, முழு மனதுடன் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூற வேண்டும்.

        * குட் மார்னிங், குட் ஈவினிங், ஹல்லோ போன்ற அனைத்தும் அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வாழ்த்துக்குப் பின் தான் இருக்க வேண்டும்.

        * ஒருவர் எவ்வாறு ஸலாம் உரைக்கின்றாரோ அதனைப் போலவே ஸலாம் உரைப்பது நன்னடத்தையின் பால் சார்ந்தது. அல்லது அதனை விடச் சிறப்பாக ஸலாம் உரைப்பதும் மிக்க நல்லது. அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஒருவர் உங்களுக்குக் கூறினால் அதனை விடச் சிறப்பாக வ அலைக்குமுஸ் ஸலலாம் வரஹ்மதுல்லாஹ் என்றும், ஒருவர் உங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று கூறினால் அதனை விடச் சிறப்பாக வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு என்றும் கூறுங்கள்.

        * உங்களுக்கு ஒருவர் ஸலாம் சொல்வாரானால்,அவருக்கு எந்தவித தாமதமுமின்றி பதில் உரைத்து விடுங்கள். அல்லது அவ்வாறு கூற இயலாமைக்கான காரணங்களை அவருக்கு அறிவித்து விடுங்கள்.

        * ஒருவரோ அல்லது பலரோ உங்களுக்கு ஸலாம் சொல்வாராகில், அதற்கான பதிலை மிகச் சிறப்பான அவர்கள் கேட்கும் வண்ணம் தெளிவாகக் கூறுங்கள்.

       * நீங்கள் கூறிய பதில் ஸலாத்தை அவர் செவிமடுக்கவில்லை என்பதை உணர்ந்தீர்கள் என்றால், அவர் அறியும் வண்ணம் மீண்டும் அவருக்கு பதில் ஸலாம் உரையுங்கள்.

        * உங்களது சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்குமாகில், ஒவ்வொரு சந்திப்பின் பொழுதும் ஸலாம் உரைக்க வேண்டுமா என்பதில் சடைந்து விடாதீர்கள்.

       * ஒருவரை ஸலாம் கொண்டு வாழ்த்தும் பொழுது உங்களது கைகளும் அல்லது விரல்களும் அதற்கான சைக்கினை செய்யட்டும், ஆனால் தலையை மட்டும் எந்தவிதத்தில் தாழ்த்தி ஸலாம் உரைத்து விடாதீர்கள்.

        * உங்களை அறிந்தவருக்கும் மற்றும் அறியாதவருக்கும் வாழ்த்துத் தெரிவியுங்கள். இது உங்களது நட்புறவையும், இணைப்பையும் உறுதிப்படுத்தவும், அதிகரிக்கவும் உதவும். மக்கள் நெருக்கமான இடங்களான மார்க்கெட் மற்றும் தெருக்களில் எதிர்ப்படும் ஒவ்வொருவருக்கும் ஸலாம் உரைத்துக் கொண்டே செல்வது என்பது இயலாத காரியம் தான். இருப்பினும் பிறருக்கு ஸலாம் சொல்லும் பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்வது நல்லது.

        * முஸ்லிம் நண்பர்கள் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதில் ஒருவரை மட்டும் அடையாளப்படுத்தி அவரது பெயரைக் கூப்பிட்டு ஸலாம் உரைப்பது நல்லதல்ல. அதனைத் தவிர்த்து அனைவருக்கும் ஸலாம் உரைப்பது நல்லது.

        * அதனைப் போலவே பதில் ஸலாம் உரைக்கும் பொழுது, குழுவில் உள்ளவர்கள் ஒருவரை மட்டும் அடையாளப்படுத்தி பதில் ஸலாம் உரைக்கக் கூடாது.

        * தன்னைக் கடந்துசென்று கொண்டிருப்பவர் தனக்கு ஸலாம் உரைத்தாரா இல்லையா என்பதில் சந்தேகமிருப்பின், பதில் ஸலாம் உரைப்பது கடமையல்ல.

        * ஒரு குழுவினருக்கு நீங்கள் ஸலாம் உரைக்கும் பொழுது, அந்தக் குழுவில் உள்ள ஒருவர் பதில் ஸலாம் உரைத்தாலே போதுமானது, அவர்கள் அனைவரும் பதிலுரைத்ததற்கு அது சமமாகும்.

        * உங்களுக்கு வாழ்த்துக் கூறுபவர் முஸ்லிமாக இருந்தாலும் அல்லது முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும், அவர் எந்தளவு வாழ்த்துக் கூறினாரோ அதனை விடச் சிறப்பான முறையில் வாழ்த்துக் கூற வேண்டும்.

        * இன்னும் சில சந்தர்ப்பங்களில் ஸலாம் சொல்வது தடை செய்யப்பட்டிருக்கின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒருவர் மற்றவருக்கு ஸலாம் உரைப்பது கூடாது. அதாவது, தூங்கிக் கொண்டிருப்பவருக்கு, மயக்க நிலையில் உள்ளவருக்கு, இன்னும் கழிவறைகளில் உள்ளவருக்கு.

       * முஸ்லிம்களும் மற்றும் முஸ்லிமல்லாதவர்களும் கலந்திருக்கக் கூடிய ஒரு குழுவினைக் கடந்து செல்லும் பொழுது, அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறி அவர்களைக் கடந்து செல்லல் வேண்டும்.

       * ஒருவர் கழிவறையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஸலாமிற்குப் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை.

        * வீட்டில் நுழையக் கூடிய ஒருவர், தவறாது தனது குடும்பத்தவர்களுக்கு ஸலாம் உரைத்து விட்டு வீட்டினுள் நுழைய வேண்டும்.

        *குழந்தைகளைக் கடந்து செல்லும் பொழுது, அவர்கள் தான் மூத்தவர்களுக்கு ஸலாம் உரைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமிருப்பினும், நீங்கள் அவர்களுக்கு முந்திக் கொண்டு ஸலாம் உரைப்பது நல்லது. இது அவர்களுடைய பிணைப்பையும், அன்பையும், பாசத்தையும் வளர்க்க உதவும்.

        * உங்களுக்கு ஒரு நண்பர் இருக்கின்றார். அவர் இன்னொருவர் மூலமாக உங்களுக்கு ஸலாம் சொல்லச் சொல்லி விடுகின்றார். இதனைக் கேட்கும் நீங்கள், உங்களுக்கு ஸலாம் உரைத்தவருக்கும் இன்னும் அதனை உங்களிடம் ஒப்படைத்தவருக்கும் சேர்த்து, அஸ்ஸலாமு அலைக்க வ அலைஹி (சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும், இன்னும் அவர் மீதும் உண்டாவதாக!) எனக் கூற வேண்டும்.

        * ஒரு முஸ்லிமல்லாதவருக்கு அனுப்பக் கூடிய செய்தியில், நீங்கள் இவ்வாறு அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கலாம். அஸ்ஸலாமு அலா மன் இத்தபா அல் ஹுதா என்று கூறலாம். (சாந்தியும் சமாதானமும் நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது உண்டாவதாக!)

        * இரு குழுக்களுக்கிடையே விவாதம் அல்லது ஆலோசனைகள் நடந்து முடிந்து பிரியும் பொழுதும் இரு குழுக்களும் ஒருவர் மற்றவர்களுக்கு ஸலாம் உரைத்துப் பிரிய வேண்டும். இவ்வாறு பிரியும் பொழுது விவாதங்களின் பொழுது ஏற்பட்ட மனக்கசப்புகள் குறைவதோடு, சகோதர சக வாழ்வுக்கும் அடித்தளமாக அமையும்.

        * ஒரு முஸ்லிமிற்கு தொலைபேசி மூலமாகவோ, தபால் மூலமாகவோ நீங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது எவ்வாறு ஆரம்பத்தில் அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வாசகத்துடன் ஆரம்பம் செய்கின்றீர்களோ அதனைப் போலவே முடிக்கும் பொழுதும் அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வாசகத்துடன் முடித்து விடை பெறுங்கள்.

        * முஸ்லிமல்லாதவர்களை வாழ்த்துவது என்பது இஸ்லாமிய நடைமுறைக்குப் புறம்பானதல்ல. மாறாக, அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வாசகமல்லாது வேறு வாசகங்களைக் கொண்டு அவர்களை வாழ்த்துவதில் தவறேதுமில்லை.


No comments: