Sunday, March 21, 2010

அரசுக்கு மூன்றில் இரண்டு கிடைத்தால் முஸ்லிம்கள் எல்லா உரிமைகளையும் இழக்க நேரிடும் - மேல்மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம்

அரசுக்கு மூன்றில் இரண்டு கிடைத்தால் முஸ்லிம்கள் எல்லா உரிமைகளையும் இழக்க நேரிடும் என எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முண்ணனியில் போட்டியிடகின்ற மேல்மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஐக்கிய தேசிய முண்ணனி வேட்பாளர்களை ஆதரித்து கஹடோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயத்துக்கு முன்னால் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகம் வரலாற்றில் என்றுமில்லாத அளவு பிரச்சினைகளைச் சந்தித்திருக்கின்ற இந்த நிலையில் இத்தேர்தலில் மிகவம் புத்திசாலித்தனமாக எமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். பல போராட்டங்களுக்கு மத்தியில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்றி தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவத்தை பலமிழக்கச் செய்வதே அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தர வேண்டும் என்று கேட்பதன் இரகசியமாகும். அத்தோடு அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை அடிமைச் சமூகமாக மாற்றுவதற்கும் திறைமறைவில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் இத்தருணத்தை மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற்று வரலாறு படைக்க முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

பல வருடங்களாக அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இருந்து முஸ்லிம் சமூகத்தின் மீது எந்த விதமான அக்கறையும் இன்றி இருந்து விட்டு தற்போது தேர்தல் காலத்தில் மிக மிக அன்பாகப் பழகி சில சில்லறைக்காசுகளை வீசுகின்ற போது அவற்றுக்கு முஸ்லிம் சமூகம் ஏமாறக்கூடாதென்றும் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியன் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய வேட்பாளர் சரணலால் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் ஜௌஸி ஹாஜியார் ஆகியோர் உட்பட மற்றும் பலர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தை கஹடோவிட ஐ.தே.க. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கிளையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments: